கண்ணப்ப நாயனார் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட புண்ணியத்தலம் காளஹஸ்தி அதன்
அருகில் உள்ளது தொண்டைமான் ஆற்றூர் என்ற ஊர். இப்பொழுது ஆந்திர தேசத்தில்
இருக்கிறது சோழர்காலத்தில் கட்டிய கோதண்ட ராமேச்வரம் என்னும் ஆதித்தேச்வரர்
கோயில் அவ்வூரில் இருக்கிறது. வரலாறு படைத்த ஒரு மிகப்பெரிய சோழப்
பேரரசனுடய கோயில் இது. இதன் வரலாறு மிகவும் சுவயானது.
தமிழ்நாட்டின் வடபகுதியை மிகப் பெரும் பேரரசாக 500 ஆண்டுகள் ஆண்டவர்கள்
பல்லவர்கள். அந்தப் பல்லவப் பேரரசுக்கு இன்றைக்கு சரியாக 1100 ஆண்டுகளுக்கு
முன்னர் முற்றுப்புள்ளி வைத்தவன் அந்த சோழப் பேரரசன். அவனுக்கு ஆதித்த
சோழன் என்று பெயர். அவன் ஏறக்குறைய கி.பி. 887ல் பல்லவ அரசன் அபராஜிதன்
என்பவனை சண்டையில் வீழ்த்தி தொண்டை நாட்டை அதாவது காஞ்சிபுரம், சென்னை,
செங்கல்பட்டு முதலிய பகுதிகளைக் கைப்பற்றினான். அதனால் அவன் "தொண்டை நாடு
பாவிய சோழன்" என்று பட்டம் பூண்டான். அதோடு தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி
முடிந்துவிட்டது.
ஆதித்த சோழன் கொங்கு நாட்டையும் வென்று அங்கிருந்து ஏராளமான பொன் கொண்டு
வந்து தில்லை நடராஜப் பெருமான் கோயிலுக்கு பொன் வேய்ந்தான். சோழ
சாம்ராஜ்யத்தை தோற்றிவித்த விஜயாலய சோழனுடைய அருமை மைந்தன் அவன். சிறந்த
சிவபக்தன். காவிரியாறு தொடங்கும் சஹ்யமலையிலிருந்து பூம்புகார் வரையிலும்
காவிரியின் இருகரையிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கற்கோயிலை சிவபெருமானுக்கு
எடுத்தவன். அவன் எடுத்த எழிலே உருவான பல கோயில்கள் இன்றும் சோழ நாட்டில்
இருக்கின்றன. அவன் காலத்து சிற்பங்களும் செப்புத் திருமேனிகளும்
உன்னதக்கலைச் சிகரங்களாகத் திகழ்கின்றன. இந்தப் புகழ்வாய்ந்த ஆதித்த சோழன்
தொண்டைமானாற்றூரில் இறந்து போனான்.
அந்த ஆதித்த சோழனுக்கு எடுக்கப்பட்ட சமாதிக கோயில்தான் இது. அக்காலத்தில்
சாமாதிக் கோயிலை "பள்ளிப்படை" என்று கூறுவர். அரசர் இறந்தால் அவரை
ஈமத்தீயிலோ அல்லது குழியிலோ இடுதலை பள்ளிப் படுத்தல் என்று கூறுவர். ஆதலின்
அங்கு எடுத்த கோயிலை பள்ளிப்படை என்பார்கள். ஆதித்த சோழனுடைய
சமாதிலிங்கத்தை இக்கோயில் கருப்ப கிருஹத்தில் இன்றும் காண்கிறோம். ஆதித்த
சோழனின் மகன் பராந்தக சோழனுடைய கல்வெட்டு இக்கோயிலின் அடிப்பகுதியில்
உள்ளது. அதிலிருந்து இக்கோயிலைப் பற்றி பல செய்திகளை அறிகிறோம்.
ஆதித்த சோழன் புரட்டாசி மாதம் கேட்டையன்று இறந்திருக்கிறான். அதனால்
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கேட்டை தொடங்கி ஏழுநாள் உத்ஸவம் நடத்துவதற்கு
இக்கோயிலில் ஏற்பாடு செய்யபட்டது. அத்துடன் அவன் பிறந்த சதய நக்ஷத்திரம்
அன்று ஒரு நாள் விழா நடத்த வகை செய்யப்பட்டது. கி.பி. 940ல் இந்த ஏற்பாடு
செய்யப்பட்டது. அப்பொழுது இந்த கோயில் வாகீஸ்வரபண்டிதர் என்பவரின்
பார்வையிலிருந்தது. அவர் ஒரு மகாவிரதி. அவர் தான் இந்த விழா நடத்த 105
கழஞ்சு பொன்னும் 4000 காடி நெல்லும் கொடுத்தார். இதிலிருந்து வரும்
வட்டியாக ஆண்டுதோறும் ஆயிரம் காடி நெல் இக்கோயிலுக்கு அளக்கவேண்டும். இதை
கொண்டு இந்த ஏழு நாள் விழாவில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் பேருக்கு உணவு
கொடுக்கவேண்டும். இந்த ஆயிரம் பேரில் 500 பேர் எல்லா சமயத்தையும் சேர்ந்த
அடியார்களாக இருக்கவேண்டும். "பக்தர்களான பல சமயத்து அந்நூற்றவர்" என்று
கல்வெட்டு கூறுகிறது. பிராமணர் 300 பேரும் மற்ற 200 பேர் தபஸ்விகளாகவும்
இருக்கவேண்டும். "தபஸ்விகளில் மகாவிரதிகள் உட்பட ஆறுசமயத்து தபஸ்விகள்
இருநூற்றவர்" என்று கல்வெட்டு கூறுகிறது. ஆறு சமயத்து தபஸ்விகள் என்பது சைவ
சமயத்தில் இருந்த ஆறு உட்பிரிவுகளைக் குறிக்கும். இவற்றை அகச் சமயம் ஆறு
என நம் பண்டைய நூல்கள் கூறும். சைவம், பாசுபதம், காளாமுகம், மஹாவிரதம்,
வாமம், பைரவம் என்று இந்த உட்பிரிவுகளைக் கூறுகிறார்கள். ஆறு சமயம் என்று
கல்வெட்டு கூறுவதால் அன்றே இவ்வகைச் சமயங்கள் தமிழகத்தில் இருந்தன என்று
அறிகிறோம்.
இக் கல்வெட்டின் மூலம் மேலும் பல செய்திகள் அறியமுடிகிறது. இவ்விழாவுக்காக
ஒதுக்கப்பட்ட நெல்லில் இருந்து உண்பதற்கு இலை இடுவான், நீராட்டுவான்,
கலமிடும் குசவன், பூவிடும் மாலைக்காரன், விறகிடுவான் முதலியோருக்கு நெல்
அளந்தனர்.
இவ்வூரில் இந்திர விழா நடத்தப்பட்டது. இங்கு ஒரு கல்விச்சாலையும்
இருந்தது. அதற்கு நெல் ஆண்டுதோறும் அளந்தனர். இக்கோயிலில் நாட்டிய அரங்கம்
இருந்தது. அதற்கு உடனுக்குடன் வேண்டும்போது பழுது பார்க்க தச்சனுக்கு நெல்
கொடுத்தனர். இந்த அரங்கத்தில் இவ்விழாவை ஒட்டி நாட்டிய நாடகங்கள்
கூத்துகள் நடத்தப்பட்டன. இங்கு கூத்தாடினார்க்கும் பாடினார்க்கும் நெல்
கொடுக்கப்பட்டது.
இந்த தர்மத்தை இக்கோயிலில் இருந்த மகாவிரதிகளும் பந்மாகேஸ்வரக் கண்காணியும்
காவிரிப்பாக்கத்து கோயில் பெருமக்களும் காத்துத் தரவேண்டும் என்று
இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோயில் மகாவிரதிகள் கீழ் இருந்தது. இது சமாதிக்
கோயில் ஆதலால் மகாவிரதிகள் இங்கு இருந்திருக்கிறார்கள்.
சைவ சமயக் கோயில் ஆனாலும் எல்லாச் சமயத்தையும் சேர்ந்த 500 பக்தர்களுக்கு
திருவிழா ஏழு நாட்களுக்கும் உணவு கொடுக்கவேண்டும் என்னும் கட்டளை அன்றைய
பரந்த சமய நோக்கை குறிக்கிறதல்லவா?
இப்போழுதுள்ள கோயிலின் லிங்கமும் கோயில் அடிப்பகுதியும் மட்டுமே
தொன்மையானவை. மேல் பகுதி முன்னர் செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும்.
பிற்காலத்தில் அது கருங்கல்லால் மாற்றப்பட்டிருக்கிறது. இறந்து
போனவர்களுக்கு கோயில் கட்டும் வழக்கம் நம் நாட்டில் இல்லை என்று சிலர்
கருதுகிறார்கள். அது சரியான கருத்து இல்லை என்பதற்கு இக்கோயிலே சான்று.
விமானம் கோபுரம் லிங்கம் நந்தி முதலிய எல்லாம் நிறைந்த பெருங்கோயிலாக
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் இது வழிபாட்டில் இருக்கிறது. ஏன்
தெரியுமா? நம் முன்னோர் இறந்திடில் தெய்வத்தோடு ஒன்றி தெய்வமாகவே நிற்பர்
என்பது நமது தத்துவம். நம்பிக்கையும் கூட. இறந்து ஆயிரத்து நூறு
ஆண்டுகளாகியும் என்றும் தெய்வமாக இங்கு நிற்கிறான் தமிழகத்தில் வரலாறு
படைத்த பெரும் சோழச் சக்கரவர்த்தி. ஆதித்த சோழன் இறந்தும் இறந்திலான்.
No comments:
Post a Comment