செங்கற்பட்டு மன்னன், கலம்பக புகழ்ப் கொண்ட காந்தவராயனுக்குச் சிலை அமைக்கவேண்டுமென பல்லாண்டுகளாக மக்கள் கூறி வருகின்றனர். உவமை கவிஞர் சுரதா "வன்னிய வீரன்" என்ற தலைப்பில் காவியம் எழுதி உள்ளார். அவ்வரசனை பற்றிய வரலாறு.
செங்கற்பட்டிற்க்கு அருகாமையில் திருவிடைச்சுரத்தினை காந்தவராயன், சேந்தவராயன் என்ற இரட்டை வன்னியக்குல பள்ளி மன்னர்கள் ஆண்டு வந்தனர். ஏறக்குறைய கி பி 1520 இல் கிருஷ்ண தேவராயர் காலத்தில் அவர் கட்டளைக்கு இணங்க மறுத்து வணங்கா முடியர் ஆயினார் இரட்டையர்.
வரி தர மறுத்த மன்னர்களின் மணி முடியை அடக்கிய கிருஷ்ண தேவராயருக்கு இவர்கள் அடங்காது சிம்மா சொப்பனமாக விளங்கி வரி தராதது மனதில் மருட்சியை உண்டாக்கியது.
தென் வடக்காக 1149 அடி, கீழ் மேற்காக 2000 அடி, அலங்கச் சுவர் அகலம் 20 அடி, இதற்க்கு 30 அடி அகழி சூழ் கோட்டை, இக்கோட்டைக்குள் ஓர் உள் கோட்டை. உள்கோட்டையும் அரண்மனையும் மலை மேல் அமைத்து ஏட்டில் எழுதவென்னா ஆற்றலோடு ஆண்டு வரும் வன்னிய மன்னராகிய நம்மிடம் அந்நியன் வரி கேட்பதாவது, நாம் கொடுப்பதாவது என ஆர்ப்பரித்தனர். கிருஷ்ண தேவராயர் இரட்டையார் மேல் பெரும் படையை ஏவினார், மடை திறந்த வெள்ளம் என மாற்றான் அனுப்பிய படைகள் காந்தவராயன் இருக்குமிடம் தெரியாது கலங்கினார்.
போர் முனையில் காற்றென விரையும் போர் புறவியேறி காட்டாறு விரைவிலே கலக்கி, கிருஷ்ண தேவராயர் படையை முறியடித்து போர் கொடி உயர்த்தினான் புலி மறவன் காந்தவராயன். கிருஷ்ண தேவராயர் படை நான்கு திங்கள் முற்றுகையிட்டும் என்ன? ஆந்திரம் தமிழின் அடி வீழ்ந்தது. வன்னியரை அவர் தம் ஆட்சியை பொறாத அந்நிய முதலியின் சொல்படி உய்யாள்வான் என்ற பாளையக்காரன் கிருஷ்ண தேவராயன் ஆணைப்படி ஆறு மாதம் போரிட்டும் வீறு காணாது தோல்வியை தழுவினான்.
வன்னியரின் வெற்றியை பொறுத்து கொள்ள முடியாத அந்நிய முதலி, மன்னன் கிருஷ்ண தேவராயனிடம் ஒரு சூழ்ச்சி மூட்டையை அவிழ்த்தான். அதற்க்கு பதிலாக ஒரு பொன் முடிப்பும் பெற்றான். வெருகூர் நோக்கி சென்ற குப்பாச்சி என்ற ஆடல் மகளை அழைத்து வந்து கிருஷ்ண தேவாராயனிடம் விட்டான். காந்தவராயன் தலையை எனக்கு கொண்டு வந்து தந்தால் பதினாயிரம் பொன் பரிசு ! இயலுமா? என்றான் கிருஷ்ண தேவராயன். சரி என்றால் குப்பாச்சி. காந்தவராயனிடம் சென்றாள், வாள் முனையில் வெல்ல முடியாத அவன் ஆண்மையை விழி முனையில் மயக்கத்தில் ஆழ்த்தி, வாயில் அமுதம் கையில்
கனிச்சாற்றொடு நஞ்சு கலந்து, காந்தவராயனுக்கு தந்தாள் அந்த வஞ்ச மகள். இறந்த காந்தவராயனின் மணி முடியை துண்டித்து கையில் எந்தி கிருஷ்ண தேவராயனின் மெய் சிலிர்க்க அவன் காலடியில் கிடத்தினான். போலி வெற்றி பெற்ற கிருஷ்ண தேவராயன் புன்னகை பூத்தான்.
கருகியது காந்தவராயன் ஏற்றிய மறம், கன்னி தமிழ் இரட்டையரின் கலம்பக கொண்ட மாவீரன் காந்தவராயனின் சேந்த மேனியை செந்தணல் தழுவியது. ஒப்பந்த படி ஒரு பதினாயிரம் பெற்றாள். தலை தந்த வேசிக்கு விலை தந்தான் கிருஷ்ண தேவராயன். அவன் ராஜதந்திரி.
வீர புகழ் சுமந்த காந்தவராயனின் முடிவு சேந்தவராயன் உடலின் செங்குருதி கொதித்து கொப்பளித்தது. இடியோசை கேட்ட நாகமென அண்ணன் மடிந்த அவலத்தால் மண்ணில் வீழ்ந்து மயங்கினான், துவண்டான், துடித்தான், பதறினான்.
சபதம் மேற்கொண்டான் சேந்தவராயன். கிருஷ்ண தேவராயன் மேல் போர் தொடுத்தான். குகையை விட்டு பழியொழிக்க புறப்படும் சிங்கம் போல் புறப்பட்டு சென்று கிருஷ்ண தேவராயனின் படைகளை கண்ட துண்டமாக்கி எண்டிசையும் சிதறி ஓட முறியடித்தான் அந்த வன்னிய மாவீரன். சதியால் தன் அண்ணன் காந்தவராயனை கொன்ற ஆடல் அழகி குப்பாச்சியையும் அவள் உறவுகளையும் கொன்று அவர்கள் தலைகளை ஏரியில் மிதக்க விட்டான் சேந்தவராயன். பிணா ஊர் என்றும் ஏரிக்கு பிணா ஏரி என்றும் இன்றும் பெயர் வழங்குகிறது. அவள் இருந்த இடம் குப்பாச்சி மேடு என்று இன்றும் வழங்குகிறது.
திருவிடைச்சுரத்தில் இன்றும் அந்த வன்னிய அரசர்களின் கோட்டை இருக்கிறது.
- பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்